எழுத்து ப்ரிட்டம் சிங், அல்ஜூனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
தண்ணீர்க் கட்டணம் 30% உயர்த்தப்படுவதாக 2017-ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தை வெளியிட்டபோது அரசாங்கம் அறிவித்தது. இச்செய்தியால் திகைப்பு முதல் மனவேதனை வரை பலதரப்பட்ட உணர்வுகளுக்குச் சிங்கப்பூரர்கள் உள்ளாயினர். வீவக கார் நிறுத்துமிடக் கட்டண உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, சேவைப் பராமரிப்புக் கட்டண உயர்வு உட்பட 2016 டிசம்பர் கடைசியிலிருந்து அடுத்தடுத்து விலை உயர்வு அறிவிப்புகளைக் கேட்டுத் தவிப்படைந்த சிங்கப்பூரர்கள் பலருக்கும், ஈராண்டுகளில் தண்ணீர்க் கட்டணம் வெகுவாக உயர்த்தப்படும் செய்தி மின்னல்போல அதிர்ச்சியளித்தது.
நிதி அமைச்சரின் வரவுசெலவுத் திட்ட உரைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கருத்துரைத்த ஒரு மசெக நாடாளுமன்ற உறுப்பினர், “தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை உயர்த்துவதற்காகவே தண்ணீர்க் கட்டணம் உயர்த்தப்படுவதாக நினைக்கிறேன்,” என்று கூறியதாகச் செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால், சாதாரண சிங்கப்பூரர்கள் பலருக்கும் இத்தகைய கருத்து நம்ப முடியாதது என்றும் உண்மை நிலைக்குப் புறம்பானது என்றும் சொன்னால் மிகையாகாது. “சுத்தியல்” நடத்திய மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளிலும் குடியிருப்பு நகரங்களில் சிங்கப்பூரர்களுடன் உரையாடியதிலும், சாதாரண குடிமக்கள் பலரும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பது புலனானது.
“ஐயோ, பொதுத் தேர்தலில் 70% வாக்குகள் கிடைத்ததால் மசெக இப்படிச் செய்கிறது! ஆலோசிக்கவோ அல்லது விளக்கமளிக்கவோ எதுவும் முக்கியமில்லை!”
உண்மை என்னவெனில், 17 ஆகஸ்ட் 2015 அன்று, அப்போதைய சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், “இந்தத் தருணத்தில் (தண்ணீர்க் கட்டணத்தில்) திருத்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை” என்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
2015-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அவர் இவ்வாறு கருத்துரைத்தது முக்கியமான, கவனிக்கப்படவேண்டிய பதிலாகும். தண்ணீர்ப் பற்றாக்குறை முக்கியமானதொரு பிரச்சனை அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அக்கறைக்குரிய உண்மையான விவகாரம் எரிசக்தியின் விலையும் தண்ணீர் உற்பத்தி செலவும் என்றார் அவர்.
2015-ல் இத்தகைய கருத்தைக் கொண்டிருந்த மசெக அரசாங்கம், இந்த ஆண்டு, அதுவும் பொருளியல் மெதுவடைந்துவரும் நிலையில், தண்ணீர்க் கட்டணத்தை உயர்த்துவதற்கு என்ன காரணம் என்பதைப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் அறிய விரும்புகின்றனர். எரிசக்தி விலை திடீரென 30% அதிகரித்து விட்டதா?
தண்ணீர்க் கட்டண உயர்வால் உணவு விலைகளும் காப்பி போன்ற பானங்களின் விலைகளும் உயரும் என்ற அச்சத்தாலும் சிங்கப்பூரர்கள் 30% உயர்வுக்கு அரசாங்கத்திடமிருந்து விளக்கம் பெற விரும்பினர். ஆனால், அரசாங்கம் விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக, தண்ணீர்ப் பற்றாக்குறை பற்றி பேசத் தொடங்கியது. ஆனால் 2015-ல், தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்சனையை எரிசக்தியின் விலையைச் சார்ந்திருந்த எரிசக்தி பாதுகாப்பு பிரச்சனை என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது தண்ணீர் விவகாரம் பற்றி பேசுவதற்காகப் பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் எழுந்து நின்றபோது, கட்டண உயர்வு விவகாரத்திற்கு பின்வரும் வடிவத்தைக் கொடுத்தார் – “நம் நாடு நீடித்து நிலைப்பதற்குத் தண்ணீர் அத்தியாவசியம் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோமா? தண்ணீர்க் கட்டணத்தை நாம் முறைப்படி நிர்ணயிக்கவேண்டும் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோமா?”
ஆனால், இந்த அடிப்படை விவகாரங்களுக்கு அப்பாற்பட்ட பதிலைப் பொதுமக்கள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்தனர். தண்ணீர்க் கட்டணத்தை அரசாங்கம் எவ்வாறு நிர்ணயிக்கிறது என்பது பற்றிய நுட்பமான கூறுகளை மக்கள் புரிந்துகொள்ள விரும்பினர் என்பது தெளிவாகத் தெரிந்தது. குறிப்பாக, தண்ணீர் உற்பத்தி தொழில்நுட்பத்தில் பற்பல மேம்பாடுகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், இதுபற்றி மக்கள் விளக்கம் பெற விரும்பினர். 2017 வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது, பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் தொடராகப் பல கேள்விகளை முன்வைத்தனர்.
பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சாரங்கள்:
குமாரி சில்வியா லிம்
குமாரி சில்வியா லிம் (அல்ஜூனிட்): நேற்று, சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் தண்ணீர்க் கட்டண உயர்வுக்குப் பல்வேறு காரணங்கள் கொடுத்தார். ஆனால், இந்தக் காரணங்கள் நீண்டகாலமாக இருந்து வருபவை. உற்பத்தி செலவு அதிகரிப்பு, கூடுதலான கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகள் கட்டவேண்டிய அவசியம் போன்ற காரணங்கள் திடீரென எழவில்லை.
தண்ணீர்க் கட்டணம் மாறாதிருந்த கடந்த 17 ஆண்டுகளில், தண்ணீர்க் கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் இந்த ஆண்டுக்கு முன்பாக அரசாங்கத்திற்குத் தோன்றவில்லையா? ஒப்புநோக்க, எதிர்வரவிருக்கும் கரிம வரிக்கு ஈராண்டுகால முன்னறிவிப்பு தரப்பட்டுள்ளது. கரிம வரி 2019-ல் அமலாக்கப்படுவதற்கு முன்பே அரசாங்கம் அறிவித்துவிட்டது. இந்த முன்னறிவிப்பு காலகட்டம் வரவேற்புக்குரியது. ஏனெனில், தொழில் நிறுவனங்களும் பயனீட்டாளர்களும் எரிசக்தியைச் சிக்கனப்படுத்தும் நடவடிக்கைகளில் முதலீடு செய்து தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள கால அவகாசம் கிடைக்கும்.
அதேபோல, இவ்வாண்டு ஜூலை மாதம் அமலாக்கப்படும் கட்டண உயர்வுக்காக, இதேபோல ஈராண்டுகளுக்கு முன்பாக, 2015 ஜூலை மாதத்தில், அறிவிப்பு செய்து, சிங்கப்பூரர்களை முன்கூட்டியே தயார்ப்படுத்துவது ஏன் சாத்தியப்படவில்லை? ஒருவேளை, 2015 ஜூலை மாதம் இத்தகைய அறிவிப்புக்குப் பொருத்தமான காலகட்டமாக அமையவில்லை போலும்.
திரு பிங் எங் ஹுவாட்
திரு பிங் எங் ஹுவாட் (ஹவ்காங்): 2000-ம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்ததில் எவ்வளவு நட்டம் ஏற்பட்டிருப்பதால் இவ்வளவு பெரிய கட்டண உயர்வு தேவைப்படுகிறது என்ற விவரத்தைப் பொறுப்பமைப்புகள் பகிர்ந்து கொள்ள முடியுமா? எனது நாடாளுமன்றக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மசகோஸ், 10 ஆண்டுகளுக்கு முன்போடு ஒப்பிடுகையில் தற்போதைய தேசிய சராசரி தண்ணீர் உபயோகம் சுமார் 11% குறைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இன்றைய தேசிய சராசரியைவிடக் கூடுதல் தண்ணீர் பயன்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் 40 விழுக்காடாக நிலையாக இருந்து வருகிறது. தனிநபரின் சராசரி பயன்பாட்டைப் பார்த்தோமானால், சிங்கப்பூரின் தண்ணீர் பயன்பாடு லண்டன், மெல்பர்ன், தோக்கியோ, ஹாங்காங், நியூயார்க் ஆகியவற்றைவிடச் சுமார் 5% முதல் 70% வரை குறைவாக இருக்கிறது.
இந்தப் புள்ளிவிவரங்களெல்லாம் எதைக் காட்டுகின்றன? தண்ணீர் அரிய வளம் என்பது சிங்கப்பூரர்களுக்குப் புரிகிறது என்பதையும், இத்தனை ஆண்டுகளாக இந்த அரிய வளத்தைப் பாதுகாக்க நாம் நமது பங்கைச் செய்து வருகிறோம் என்பதையும் காட்டுகின்றன. அமைச்சரும் இதை ஒப்புக்கொண்டு, சிங்கப்பூரர்கள் மெத்தனமாக இருக்கக்கூடாது என்றும் கூடுமானவரை தண்ணீரை அதிகமாகச் சேமிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சிங்கப்பூரர்கள் ஏற்கனவே இதைச் செய்திருக்கிறார்கள். இனி வரும் காலத்திலும் சிங்கப்பூரர்கள் இதைச் செய்வார்கள் என நான் நம்புகிறேன்.
திரு டெனிஸ் டான்
நாம் உயிர் வாழ்வதற்குத் தண்ணீர் அத்தியாவசியம் என்றும், அதனால் கடல்நீர் சுத்திகரிப்பு, புதுநீர் ஆகியவற்றின் உயர் உற்பத்திச் செலவைத் தண்ணீர்க் கட்டணம் பிரதிபலிக்கவேண்டும் என்றும் நிதி அமைச்சர் தமது வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது எனக்குப் புதிராக இருக்கிறது. என் கேள்வி இதுதான். கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகளும் புதுநீர் ஆலைகளும் சில காலமாகவே நம்மிடம் இருந்து வந்துள்ளன. அண்மை ஆண்டுகளில், நீர்த்தேக்கங்கள், கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை, மலேசியாவிலிருந்து தருவிக்கப்படும் தண்ணீர் விநியோகம், மற்ற தண்ணீர் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கும் மேம்பட்ட தீர்வு காணப்பட்டுள்ளது. தண்ணீர் விநியோகத்திற்கு நம்மிடம் அதிகமான தெரிவுகள் ஏற்கனவே இருக்கின்றன. பிறகு ஏன் திடீரென தண்ணீரின் உயர் செலவு பற்றி பேசப்படுகிறது? அண்மை ஆண்டுகளில் இதுபற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை?
திரு ப்ரிட்டம் சிங் மற்றும் அமைச்சர் மசகோஸ்
திரு ப்ரிட்டம் சிங் (அல்ஜூனிட்): …தண்ணீர்க் கட்டணத்தை எப்போது உயர்த்துவது என்பதைப் பொதுப் பயனீட்டுக் கழகம் எவ்வாறு நிர்ணயிக்கிறது என அமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன். ஏனெனில், பொதுப் பயனீட்டுக் கழக ஆண்டு அறிக்கையின்படி, அரசாங்க மானியங்கள், ஒருங்கிணைந்த நிதிக்கான பங்களிப்பு, வரி ஆகியவற்றுக்குப் பிறகு, கழகத்தின் நிகர வருமானம் 2010-ம் ஆண்டுக்கும் 2012-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தோடு ஒப்பிடுகையில் 2013-ம் ஆண்டுக்கும் 2015-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அதிகமாக இருந்தது. 2013-ம் ஆண்டுக்கும் 2015-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நிகர வருமானம் சுமார் $550 மில்லியன். 2010-ம் ஆண்டுக்கும் 2012-ம் ஆண்டுக்கும் இடையில் நிகர வருமானம் $339 மில்லியன்.
திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி: இந்தக் கேள்விகளைக் கேட்டதற்கு உறுப்பினருக்கு எனது நன்றி. பொதுப் பயனீட்டுக் கழக ஏடுகளைப் பொறுத்தவரை, புள்ளிவிவரங்களின் உண்மையான அர்த்தத்தை எளிமைப்படுத்திக் கூறுவது மிகவும் சிக்கலானது என்று நினைக்கிறேன். எங்கள் ஏடுகள் கூடின தொகைகளிலானவை, வரவுசெலவு ரொக்கத்திலானது, இவற்றை நாங்கள் ஒருங்கிணைக்க வேண்டும். நமது தண்ணீர் அடிப்படை வசதிகளுக்கான நிதியளிப்பில் ஒட்டுமொத்த அரசாங்க அணுகுமுறையை ஆராயும்படி நிதி அமைச்சரிடம் நான் கேட்டுக் கொள்வேன். இதுவே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனேனில், சில பகுதிகளுக்கு அரசாங்கம் நிதியளிக்கிறது, சில பகுதிகளுக்கு பொதுப் பயனீட்டுக் கழகம் நிதியளிக்கிறது. இவற்றைத் தனித்தனியாகப் பார்க்கும்போது கூட்டிக்கழிக்க முடியாது… தண்ணீரின் விலை, இன்றைய நிலைப்படி, நாங்கள் உயர்த்த எண்ணும் விலை, நீண்டகால குறுக்குநிலை செலவாகும். இதுதான் அடுத்த சொட்டு நீரின் உற்பத்தி விலை. எனவே, எந்தக் காரணத்தாலும், நமக்குத் தேவைப்படும் அடுத்த சொட்டு நீர் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகளிலும் புதுநீர் ஆலைகளிலும் இருந்தே பெறப்படும். எனவே, இந்த விலை ஏற்கனவே உள்ளடக்கப்பட்டுவிட்டது. இந்த விலை ஒரு பிரச்சனையல்ல. இது நிகழாமல் தடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம், நாம் என்ன செய்ய முடியும் என்பதுதான் பிரச்சனை. ஏனெனில், இது விநியோக விவகாரம் மட்டுமல்ல; இந்நிலை நமக்கு எப்போதாவது ஏற்படுமாயின் மிகவும் சிக்கலான விவகாரமாக இருக்கும்.
தண்ணீர் அத்தியாவசியமான பொதுப் பயனீட்டுப் பொருளாகவும் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானதாகவும் இருக்கும் நிலையில், தண்ணீர்க் கட்டண உயர்வுக்கு அரசாங்கம் நியாயமான காரணமளித்ததா, இத்தகைய உயர்வால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு பரிசீலிக்கப்பட்டதா என்பதில் கவனம் செலுத்தும் கேள்விகளைப் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர். தண்ணீர்க் கட்டணம் 30% உயர்த்தப்படும்போது வாழ்க்கைச் செலவில் தவிர்க்கமுடியாத பாதிப்பு ஏற்படும். இதனால் எல்லா சிங்கப்பூரர்களும் பாதிக்கப்படுவார்கள்.
இதோடு ஒப்புநோக்கும்போது, பொறுப்பான அரசாங்கம் சந்தை நிலவரத்தைச் சீர்குலைத்துக் காட்டாது என்றும், வருங்காலத் தலைமுறைகளுக்குச் சுமையாக இருக்கக்கூடிய மானியங்களை உருவாக்காமல் அத்தியாவசியப் பொருட்களுக்கு முறையான விலையை நிர்ணயிக்கும் என்றும் வாதாடி தமது வரவுசெலவுத் திட்ட உரையை முடித்துக் கொண்டார் அமைச்சர் சான் சுன் சிங். ஆனால், கேள்வி இதுவல்ல. தண்ணீர்க் கட்டணம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பதற்கு நியாயமான விளக்கமளிப்பதே பொறுப்பான அரசாங்கத்தின் கடமை.
ஆனால், தண்ணீர்க் கட்டணம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்ற நுணுக்கங்களை நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ அல்லது வெளியில் சிங்கப்பூரர்களிடமோ விளக்கிக்கூற அரசாங்கம் முயற்சி செய்யவில்லை. இந்நிலையில், 30% கட்டண உயர்வை அறிவிப்பதற்கு முன்பாகச் சிங்கப்பூரர்களிடம் இன்னும் தெளிவாக விளக்கியிருக்கலாம் எனப் பிரதமர் லீ சியன் லூங் ஒப்புக்கொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அரசாங்கம் இதைச் செய்திருக்கக்கூடிய ஆகச் சிறந்த களம் நாடாளுமன்றம் என்பது நகைப்புக்குரிய முரண்பாடு.